
சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்கியது எம்பூரான் படக்குழு
செய்தி முன்னோட்டம்
மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான எம்புரான் திரைப்படத்தில் இருந்து 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் நெருக்கடி காரணமாக 3 நிமிடங்கள் ஓடும் 17 காட்சிகள் நீக்கப்பட்டு தற்போது எல் 2 எம்புரான் திரைப்படம் திரையிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், 2002 குஜராத் கலவரங்களை காட்டிவதாகக் கூறப்பட்டதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு மோகன்லால் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு
மன்னிப்பு கோரிய நடிகர் மோகன்லால், ஆதரவு தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன்
படம் சர்ச்சை குறித்து மோகன்லால் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், "ஒரு கலைஞராக, எனது திரைப்படங்கள் எந்த அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதப் பிரிவையும் புண்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வது எனது கடமை. நானும் எம்புரான் குழுவினரும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னதாக, எம்புரான் திரைப்படக் குழுவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்து, படைப்பு சுதந்திரத்தை வலியுறுத்தினார்.
மறுபுறம், பிரித்விராஜின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான மல்லிகா சுகுமாரன், மகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரித்விராஜை பலியாடாக மாற்ற முயற்சிப்பவர்களை அவர் விமர்சித்து, படத்தில் உள்ளவற்றுக்கு அனைவருமே கூட்டுப் பொறுப்பு என்று கூறினார்.