
மறைந்த அபிநய சரஸ்வதி சரோஜா தேவிக்கு மாநில அரசின் உயரிய விருது அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது, மறைந்த புகழ்பெற்ற நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை பி. சரோஜா தேவி ஆகியோருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட உள்ளது. இந்த முடிவை கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்ததாக, மாநில சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) தெரிவித்தார். சஹஸ சிம்மா (துணிச்சலான சிங்கம்) எனப் போற்றப்படும் விஷ்ணுவர்தன், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அவரது கலைப்பயணம், அவரை தென்னிந்திய சினிமா வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க ஆளுமைகளில் ஒருவராக நிலைநிறுத்தியது.
குவெம்பு
தேசியக் கவி குவெம்பு
அபிநய சரஸ்வதி என்று புகழப்படும் பி. சரோஜா தேவி, 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, திரையுலகிற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர் ஆவார். மேலும், தேசியக் கவி குவெம்புவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பவும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே கூட்டத்தில், மேல் பத்ரா பாசனத் திட்டம் குறித்து விவாதிக்க செப்டம்பர் 16 ஆம் தேதி ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 75,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.