தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி
கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சர்காரி ஹிரியா பிரதாமிகா ஷாலே திரைப்படத்தில், அரசு பள்ளிகளை காக்க வேண்டிய அவசியத்தை பேசிய நடிகர் ரிஷப் ஷெட்டி, தனது சொந்த கிராமத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார். கன்னட நடிகர் மற்றும் இயக்குனரான ரிஷப் , கடந்தாண்டு வெளியான காந்தாரா திரைப்படத்திற்கு பின்னர் இந்தியா முழுவதும் அறியப்படுகிறார். தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் தனது சொந்த ஊரான கர்நாடகாவில் உள்ள கெரடி கிராமத்திற்குச் சென்ற ரிஷப், அங்கு தான் படித்த பள்ளிக்கு சென்று அப்பள்ளியை தத்தெடுத்துக்கொண்டார். மேலும் மாணவர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளிகளை காக்க வேண்டியதற்கான தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தயங்கும் பெற்றோர்
இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "இன்று பெற்றோர்கள் பலர் அவர்களது குழந்தைகளை, மோசமான உட்கட்டமைப்பு வசதிகளாலும், போதுமான ஆசிரியர்கள் இல்லாததாலும், அரசு பள்ளியில் சேர்க்க தயங்குகின்றனர்". "இதை நான் என் சர்காரி ஹிரியா பிரதாமிகா ஷாலே திரைப்படத்தில் பேசி உள்ளேன். இந்தக் கதையை என் முதல் படமாக நான் எடுக்க திட்டமிட்டேன். பல காரணங்களால் என்னால் அதை செய்ய முடியவில்லை". "மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சக்தி சினிமாவுக்கு உண்டு. இருப்பினும் ஒரு தனி மனிதரால் மட்டும் மாற்றத்தை உண்டாக்க முடியாது. என்னால் சினிமாவில் மாற்றத்தை உண்டாக்க முடியாவிட்டால், நேரடியாக களத்தில் இறங்கி மாற்றத்தை உண்டாக்குவேன்" என தெரிவித்தார்.