
ஜெயிலர் 2 படத்தின் இறுதி வடிவம் எப்படி இருக்கும்? இயக்குனர் நெல்சன் கொடுத்த அப்டேட்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில், அப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், ஒரு நிகழ்ச்சியில் ஜெயிலர் 2 திரைப்படம் குறித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. "கதையின்படி ஜெயிலர் 2 நன்றாக வந்துள்ளது. ஆனால், படத்தின் இறுதி வடிவம் எப்படி இருக்கும் என்பதைப் படப்பிடிப்பு முடியும் வரை என்னால் சொல்ல முடியாது. இந்தப் படம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன்." என்று அதில் நெல்சன் கூறியுள்ளார். வழக்கமான படங்களுக்கு இருக்கும் அளவுக்கு ஜெயிலர் படத்தின் முதல் பாகத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை. இருப்பினும், அந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.
எதிர்பார்ப்பு
ஜெயிலர் 2 குறித்து எதிர்பார்ப்பு
இதன் காரணமாக, ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் நெல்சன் பேசாமல், படத்தின் தரம் குறித்து மட்டுமே பேசியிருப்பது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அதிகமான எதிர்பார்ப்பு சில சமயங்களில் படத்திற்குப் பாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இதை உணர்ந்துதான் நெல்சன் இவ்வாறு பேசியிருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்தின் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோருடன் மேலும் சில முக்கிய நட்சத்திரங்கள் இணையவுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ஜெயிலர் 2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.