மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'கண்மணி' பாடலை நீக்ககூறும் இளையராஜா
இந்தாண்டு வெளியான முக்கியமான வெற்றி திரைப்படங்கள் பட்டியலில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' நிச்சயம் இடம்பெறும். இந்தாண்டு தொடக்கத்தில் மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம், மொழிகளை தாண்டி இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'குணா' படத்தின் ரெபெரென்ஸ் மற்றும் 'குணா' படத்தில் இடம்பெற 'கண்மணி' பாடலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதற்காக நடிகர் கமல்ஹாசனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். உலக அளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மலையாள திரையுலகில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
உரிய இழப்பீடு கோரும் இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா, 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட குழுவிற்கு நோட்டீஸ் ஒன்றை தற்போது அனுப்பியுள்ளார். அப்படத்தில் உரிய அனுமதியின்றி தன்னுடைய இசை (குணா பட பாடல்) பயன்படுத்தியதாக கூறி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பதிப்புரிமை சட்டப்படி தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அந்த பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் வெளியான ரஜினியின் 'கூலி' படத்தின் டைட்டில் ரிவீல் வீடியோவிலும் தனது இசை இடம்பெற்றுள்ளது எனவும், கமலின் 'விக்ரம்' படத்தில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டது எனவும் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் இளையராஜா.