
இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் என்ன பிரச்சனை?
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இடையே நீண்ட காலமாகவே பிரச்சனை இருந்து வரும் நிலையில், தற்போது அது மேலும் முற்றியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நடிகர் கார்த்தியின் 25வது படமாக, ஜப்பான் திரைப்படம் வெளியானது. முன்னதாக நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கார்த்தியின் 25 பட இயக்குனர்களும் பங்கேற்றனர்.
இருப்பினும், முதல் படத்தின் இயக்குனரான அமீர் பங்கேற்கவில்லை. அமீர் பங்கேற்காதது குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பம் எழுந்தது.
மேலும், பருத்திவீரன் திரைப்படத்தில் நடிக்கும் போது கார்த்தி மற்றும் அமீருக்கு இடையில் ஏற்பட்ட, பிரச்சனைகள் இதற்கு காரணமாகவும் சொல்லப்பட்டது.
2nd card
பருத்திவீரன் மனரீதியாகவும் பொருளாதரரீதியாகவும் பாதிப்பு ஏற்படுத்தியது- அமீர்
இது குறித்து இயக்குனர் அமீரிடம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமீர், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என கூறியுள்ளார்.
மேலும், மூன்றாவது நபர் மூலம் அழைப்பு வந்ததாகவும், தான் மூன்றாவது நபர் மூலம் அழைக்கப்பட்டால், நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர் அல்ல எனவும் கூறியிருந்தார்.
இவற்றை விட பருத்திவீரன் திரைப்படம் அமீருக்கு, மனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும், மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
இப்படம் தொடர்பாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர்ந்த வழக்கு 16 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருவதாக கூறிய அமீர், இது எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
3rd card
அமீரின் கருத்துக்களுக்கு ஞானவேல் ராஜா பதில்
அமீரின் கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அமீரின் கருத்துக்களுக்கு, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் அளித்துள்ளார்.
ராம் படத்தை இயக்கி வெளியிட்ட அமீர் அப்படத்திற்கு பின், ₹58 இலட்சம் கடனில் இருந்ததாகவும், அந்த கடனை அடைக்க ஞானவேல் ராஜா உதவியதாகவும், அதன் காரணமாகவே கார்த்தியை வைத்து பருத்திவீரன் திரைப்படத்தை இயக்க அமீர் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.
இருப்பினும் படப்பிடிப்பு தொடங்கிய பின்னர், அமீர் முற்றிலும் மாறிவிட்டதாகவும், மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதால் பாதிக்கப்பட்டதாகவும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
பருத்திவீரன் படத்தில், கார்த்திக்கும் தனக்கு மட்டுமே தொடர்புள்ள நிலையில், அமீர், கார்த்தியின் குடும்பத்தினர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்ததை ஞானவேல் ராஜா சுட்டிக்காட்டினார்.
4th card
அமீர் நன்றாக திருடுவார்- ஞானவேல் ராஜா
அமீர் மீது மேலும் குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஞானவேல் ராஜா, தனக்கும், சூர்யா மற்றும் கார்த்திக்கும் பட வாய்ப்புகள் அமையும், ஆனால் அமீருக்கு பட வாய்ப்புகள் அமையுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
₹2.75 கோடி செலவில், ஆறு மாத காலத்தில் பருத்திவீரன் திரைப்படத்தை முடித்து தருவதாக சொன்ன அமீர், ₹4.40 கோடி செலவில் 2.5 வருடங்களுக்கு பின்னர் முடித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார்.
பருத்திவீரன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கணக்கு கேட்டபோது, திரையில் 35 பன்றிகள் மட்டுமே தெரிந்த நிலையில், 250 பன்றிகள் பயன்படுத்தப்பட்டதாக கணக்கு காட்டிய அமீர், அதில், 75 பன்றிகள் இறந்து விட்டதாக போலிக் கணக்கு வழங்குவதாகவும், அமீர் நன்றாக திருடுவார் எனவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
5th card
"என் பணத்தில் தான் அமீர் சினிமா எடுக்க கற்றுக் கொண்டார்"- ஞானவேல் ராஜா
ஆர்யா-அமீர் கூட்டணியில் உருவாகயிருந்த சந்தன தேவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இடமும், ₹7 கோடியை அமீர் முறைகேடு செய்துள்ளதாக கூறிய ஞானவேல் ராஜா, அந்த படத்தின் தயாரிப்பாளர், அமீரை ஃபிராடு என்று அழைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தன் பணத்தில் தான் அமீர் சினிமாவை எடுக்க கற்றுக் கொண்டதாக கூறிய ஞானவேல் ராஜா, அமீரை பொருத்தவரையில் யாராவது கிடைத்தால் திருட வேண்டும், உழைத்து சம்பாதிக்க கூடாது என்று வாழ்வதாக பேசி திரையுலகத்தினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.