Page Loader
ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை
ஜாரா படேல்(இடது), ராஷ்மிகா மந்தனா(வலது).

ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை

எழுதியவர் Srinath r
Nov 15, 2023
04:04 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் வைரலாக பரவி வந்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில், 19 வயது பிஹார் வாலிபரிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாலிபர் முதலில் டீப்ஃபேக் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததாகவும், பின்னர் அது பரவி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அந்த வாலிபரின் சமூக வலைதள கணக்கில் டீப்ஃபேக் வீடியோ முதலில் பதிவேற்றப்பட்டதால், அவரை விசாரணைக்கு அழைத்ததாக, மூத்த அதிகாரி பிடிஐயிடம் தெரிவித்தார். நவம்பர் 10 அன்று, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 465 மற்றும் 469, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66C மற்றும் 66E ஆகியவற்றின் கீழ்,டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவான IFSO, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தது.

2nd card

பீகார் வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. "டீப்ஃபேக் வீடியோவை தயாரிக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ததாக பிஹார் வாலிபர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் விசாரித்து வருகிறோம்" என மூத்த அதிகாரி தெரிவித்தார். மேலும், பீகார் வாலிபர், வீடியோவை பதிவேற்றம் செய்ய பயன்படுத்தியதாக கூறிய கைபேசியுடன், IFSO பிரிவின் முன் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட உடனே, IFSO பிரிவு மெட்டா நிறுவனத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண, URL மற்றும் பிற விவரங்கள் கேட்டு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

3rd card

எப்பொழுது தொடங்கியது டீப்ஃபேக் சர்ச்சை?

கடந்த நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் இந்திய பெண் லிப்டிற்குள் செல்வது போன்ற வீடியோவில், அப்பெண்ணின் முகத்திற்கு பதிலாக ராஷ்மிகா மந்தனாவின் முகம் டீப்ஃபேக் செய்யப்பட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், ஜாரா படேல் ஆட்சியாபகத்துக்குரிய வகையில் உடை அணிந்து இருந்ததால், இந்த வீடியோ சர்ச்சையாக மாறியது. இதன்பின் மத்திய அரசு டீப்ஃபேக் வீடியோக்களை பதிவேற்றுபவர்களுக்கு, கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தது. மேலும், ராஷ்மிகாவுக்கு ஆதரவாக அமிதாப்பச்சன், நாகசைதன்யா உள்ளிட்ட பலரும் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். மேலும் ரஷ்மிகா, இது போன்ற ஒன்று தனக்கு மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படும் போது பாதிக்கப்படும் அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்துவதாக கருத்து தெரிவித்திருந்தார்.