ரஜினியின் 'வேட்டையன்' படத்தில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதான்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் வெற்றியினைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் இது. வரும் அக்டோபர் 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. 'வேட்டைன்' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் படம் முழுக்க நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் அவர் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இதுவாகும்.
கதாபாத்திரங்கள் வெளியீடு
படம் வெளியாக இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், நடிகர்களின் கதாபாத்திரங்களை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். ஏற்கனவே, 'நட்ராஜ்' என்கிற கதாபாத்திரத்தில், மிடுக்கான தோற்றத்தில் ராணா நடிப்பதாகவும், 'பேட்ரிக்' என்ற கலகலப்பான பாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடிப்பதையும் படக்குழுவினர் வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை நேற்று மாலை வெளியிட்டுள்ளனர். 'வேட்டையன்' படத்தில் 'சத்யதேவ்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமிதாப். அவர் இப்படத்தில் இணைந்தது தங்களுக்கு கிடைத்த பெருமை என்றும் பட நிறுவனம் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் 'வேட்டையன்' படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத். இன்று இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.