அக்டோபர் 4ல் தொடங்குகிறது விடாமுயற்சி படப்பிடிப்பு? அபுதாபியில் படக்குழு
நடிகர் அஜித் விடாமுயற்சி என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ல் அபுதாபியில் தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட காலமாகவே ரசிகர்கள் இத்திரைப்படம் குறித்து அப்டேட்டை கேட்டு வந்த நிலையில் தற்போது இத்தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் புனேவில் தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கவில்லை. சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன், விடாமுயற்சி தங்களுக்கு ஒரு முக்கியமான திரைப்படம் எனவும் அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் கூறியிருந்தார்.
அபுதாபி சென்ற படக்குழு
விடாமுயற்சி திரைப்படத்தை யார் இயக்குகிறார்கள் என புதிராகவே இருந்த நிலையில் மகிழ்திருமேனி இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ல் தொடங்குவதாகவும், படக்குழு ஏற்கனவே கடந்த (செப்டம்பர்) 24 ஆம் தேதி அபுதாபி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அபுதாபி, துபாய், சென்னை உள்ளீட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், முதற்கட்டமாக நடிகர் அஜித் மற்றும் கதாநாயகி த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படம் ஆக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.