50வது படத்தில் வெற்றி கொடி நாட்டிய கோலிவுட் நடிகர்கள்
தனுஷ் நடித்து இயக்கியுள்ள 'ராயன்' திரைப்படம் சென்ற ஜூலை 26 -ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியான அன்றிலிருந்து படத்திற்கு பயங்கர வரவேற்பு உள்ளது. ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் இரு தினங்களிலேயே ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ராயன் திரைப்படம் மூன்றாம் நாளான நேற்றும் அதன் வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூலை வாரிக்குவித்துள்ளது. தனுஷின் 50வது திரைப்படமான 'ராயன்' ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், மற்ற முன்னணி கோலிவுட் நட்சத்திரங்களில் 50வது படம் என்ன? அவற்றின் நிலை என்ன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
மகாராஜா திரைப்படம் சூப்பர் ஹிட்
நடிகர் விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படம் மகாராஜா. வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதையுடன் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் திரில்லர் கலந்து அருமையான கலவையாக செதுக்கிய திரைக்கதையினால், இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி மாற்றும் விஜய் சேதுபதியின் மாஸ் அப்பீல், இப்படத்தினை ஹிந்தியிலும் ரீமேக் செய்யத்தூண்டியுள்ளது. ஆம், இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளனர்!
கமல்ஹாசனின் 50 வது படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி
உலகநாயகன் கமல்ஹாசனின் 50வது படம் சுவாரசியமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீதேவியும் நடித்துள்ளார். இப்படத்தினை இயக்கியது கமல் மாற்றும் ரஜினியின் மானசீக குருவான இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் ஆவர். அப்படத்தின் பெயர், மூன்று முடிச்சு. இதில், கமலுக்கு வில்லனாக ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
அதிகம் அறியப்படாத ரஜினியின் மைல்கல் படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50வது படம் 1979 இல் வெளியான டைகர். இது தெலுங்கு மொழி படமாகும். இப்படத்தில், அப்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் என் டி ஆர் நடித்திருந்தார். இப்படம் ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக் என கூறப்பட்டது. இப்படம் பெரிதாக ஓடியதாக தெரியவில்லை. அதேபோல ரஜினிகாந்தின் 100வது படமான ராகவேந்திராவும் வசூல் ரீதியாக பெரிதாக ஓடவில்லை.
நடிகர் விஜய்க்கு சுறா, அஜித்திற்கு மங்காத்தா
நடிகர் விஜயின் 'சுறா' படத்தை பற்றி அதிகம் கூற வேண்டியது இல்லை. அதிக பில்ட்-அப் உடன் வெளியான இந்த சுறா திரைப்படம், மண்ணை கவ்வியது. இப்படத்தின் கதையும், அரத பழசான திரைக்கதையும் இன்றளவும் ரசிகர்கள் நொந்து போய் உள்ளனர். மறுபுறம், வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது திரைப்படம் 'மங்காத்தா'. இது பயங்கர வரவேற்பை பெற்றது. அஜித் தற்போது கொண்டுள்ள சால்ட் அண்ட் பெப்பர் லுக் இப்படத்திலிருந்து தான் துவங்கியது. இன்றளவும் கல்ட் கிளாசிக்காக பார்க்கப்படுகிறது இந்த திரைப்படம்.