எஃப்டி முதிர்வுத் தொகைக்கு மறுபடியும் வரியா? வருமான வரித்துறைக்கு ஐடிஏடி செக்; முதியவர்களுக்கு நிம்மதி
செய்தி முன்னோட்டம்
வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைக் கொண்டு தொடங்கப்பட்ட ஃபிக்சட் டெபாசிட் (எஃப்டி) முதிர்வடையும் போது, அதை மீண்டும் கணக்கில் வராத புதிய டெபாசிட்டாகக் கருதி வருமான வரி விதிக்கக் கூடாது என ஹைதராபாத் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ஐடிஏடி) முக்கிய தீர்ப்பளித்துள்ளது. வருமான வரி மதிப்பீட்டு அதிகாரி ஒருவர் எஃப்டி முதிர்வுத் தொகையை இரண்டாவது முறையாகத் தவறாகக் கணக்கிட்டு வரி விதித்த வழக்கில், தீர்ப்பாயம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
இரண்டு முறை வரி
ஒரே பணத்திற்கு இரண்டு முறை வரி விதித்த வருமான வரித்துறை
வழக்கு ஒன்றில், வரி செலுத்துவோர் ஒருவர் செப்டம்பர் 2020-இல் வங்கியில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்து, அதே தொகையில் எஃப்டி தொடங்கினார்.
பின்னர் நவம்பர் மாதத்தில் அந்த எஃப்டியை முறித்து ரொக்கமாகப் பெற்றார்.
ஆனால், வருமான வரி அதிகாரி முதலீடு செய்த தொகை மற்றும் பெறப்பட்ட முதிர்வுத் தொகை ஆகிய இரண்டையுமே தனித்தனி டெபாசிட்டுகளாகக் கருதி ரூ.32.50 லட்சம் எனக் கணக்கிட்டு வரி விதித்தார்.
ஒரே பணத்தை இரண்டு முறை கணக்கில் சேர்த்தது தவறு எனத் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது.
எஃப்டி தொகை
எப்போது எஃப்டி தொகைக்கு வரி பிரச்சனை வரும்?
இந்த தீர்ப்பு அனைத்து எஃப்டிகளுக்கும் தானாக பொருந்தாது என வரி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எஃப்டி தொடங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப் பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான சரியான ஆதாரத்தை வரி செலுத்துவோர் காட்ட வேண்டும்.
கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கொண்டு எஃப்டி தொடங்கப்பட்டிருந்தாலோ அல்லது கணக்குப் புத்தகங்களில் அதைக் குறிப்பிடத் தவறினாலோ, வருமான வரித்துறை அந்தப் பணத்தைக் கணக்கில் வராத முதலீடாகக் கருதி வரி விதிக்க முழு உரிமை உண்டு.
வங்கி ஆவணங்கள்
வங்கி ஆவணங்களைப் பராமரிப்பது அவசியம்
வரி செலுத்துவோர் தங்களது பணப் பரிவர்த்தனைகளுக்கான தெளிவான சான்றுகளைப் பராமரிக்க வேண்டும்.
எஃப்டி உருவாக்கப் பயன்பட்ட பணம் சம்பளம், விவசாய வருமானம், சொத்து விற்பனை அல்லது பரிசுகள் மூலமாகக் கிடைத்தது என்பதற்கான வங்கி அறிக்கைகளைச் சரியாக வைத்திருக்க வேண்டும்.
குறிப்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிப் படிவத்தை (ஐடிஆர்) விட எஃப்டி தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில், பணத்தின் மூலத்தைக் காட்டும் ஆவணங்களை வைத்திருப்பது எதிர்கால வருமான வரிப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.