
வாட்ச்கள் முதல் ஹாண்ட்பேக் வரை:1% TCS செலுத்த வேண்டிய ஆடம்பரப் பொருட்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
நேற்று வருமான வரித்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வரி செலுத்துபவர்கள் 1% TCS வரியை எந்த பொருட்களுக்கு செலுத்த வேண்டி இருக்கும் என விரிவாக குறிப்பிடபட்டிருந்தது.
இந்த நடவடிக்கை, அத்தகைய ஆடம்பரப் பொருட்களின் விற்பனையைக் கண்டறிந்து, வரி செலுத்துவோரின் வருமான வரி விவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஏதேனும் சாத்தியமான ஏய்ப்பைக் கண்டறிய வரி அதிகாரிகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள வாட்சுகள், ஹாண்ட் பேக்குகள், பழங்காலப் பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், சன்கிளாஸ்கள், ஹோம் தியேட்டர் அமைப்புகள், காலணிகள் மற்றும் விளையாட்டு உடைகள் ஆகியவற்றிற்கு செவ்வாய்க்கிழமை முதல் விற்பனைப் புள்ளியில் 1 சதவீத வரி வசூல் (TCS) விதிக்கப்படும் என்று வருமான வரித் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பொருட்களின் பட்டியல்
TCS வரி விதிக்கப்படக்கூடிய பொருட்கள் எவை?
வருமான வரித் துறை பகிர்ந்துள்ள பட்டியலின்படி, ரூ.10 லட்சம் மதிப்பை தாண்டும் வாட்சுகள், பழங்காலப் பொருட்கள், ஓவியம், சிற்பம் போன்ற எந்தவொரு கலைப்படைப்பு; நாணயம், முத்திரை போன்ற எந்தவொரு சேகரிப்புப் பொருட்கள்; எந்தவொரு படகு, படகோட்டப் படகு, கேனோ, ஹெலிகாப்டர்; எந்தவொரு ஜோடி சன்கிளாஸ்கள்; ஹாண்ட்பேக், பர்ஸ் போன்ற எந்தவொரு பை; எந்தவொரு ஜோடி காலணிகள்; கோல்ஃப் கிட், ஸ்கை-வேர் போன்ற எந்தவொரு விளையாட்டு உடைகள் மற்றும் உபகரணங்கள்; எந்தவொரு ஹோம் தியேட்டர் சிஸ்டம்; மற்றும் பந்தயக் கழகங்களில் குதிரைப் பந்தயத்திற்கான எந்தவொரு குதிரை, போலோவிற்கான குதிரை ஆகியவை இப்போது 1 சதவீத TCS ஐ ஈர்க்கும்.
இந்த பொருட்களுக்கு TCS வசூலிக்கும் பொறுப்பு விற்பனையாளரிடம் இருக்கும்.
பட்ஜெட்
பட்ஜெட்டில் மோட்டார் வாகனங்களுக்கான TCS -உம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது
ஜூலை 2024 இல் சமர்ப்பிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 206C இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நிதிச் சட்டம், 2024, ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுள்ள மோட்டார் வாகனம் அல்லது மத்திய அரசால் அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள வேறு எந்தப் பொருளையும் விற்பனை செய்பவர், வருமான வரியாகக் கருதி விற்பனையின் மீது, நுகர்வோரிடமிருந்து 1 சதவீத TCS வசூலிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுள்ள மோட்டார் வாகனங்களுக்கான TCS வரி இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது.
பிற வகைப் பொருட்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.