உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்த இண்டிகோ, ஏர் இந்தியா
2024 ஏர்ஹெல்ப் ஸ்கோர் அறிக்கையில் "உலகின் மோசமான ஏர்லைன்ஸ்" பட்டியலில் 4.80 மதிப்பெண்களுடன் 103வது இடத்தைப் பிடித்துள்ளது இண்டிகோ நிறுவனம். குறைந்த மதிப்பீட்டிற்கு காரணமாக குறைந்த வாடிக்கையாளர் திருப்தி மற்றும் விமான இடையூறு உரிமைகோரல்களை மோசமாகக் கையாளுதல் ஆகியவை கூறப்படுகிறது. தரவரிசைக்கு பதிலளித்த IndiGo, இந்த கணக்கெடுப்பு முறையை விமர்சித்தது. இந்த கணக்கெடுப்பு இந்தியாவில் இருந்த மாதிரி அளவை வெளியிடவில்லை என்றும், "கணக்கெடுப்பின் நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றும் இண்டிகோ கூறியது. தரவரிசையில் உள்ள ஒரே இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா 6.15 மதிப்பெண்களுடன் 61வது இடத்தைப் பிடித்தது. எனினும் இந்த கருத்துக்கணிப்பிற்கு ஏர் இந்தியா விளக்கம் அளிக்கவில்லை.
டாப் இடங்களை பிடித்த விமானங்கள் மற்றும் கடைசி இடத்தை பிடித்த விமானம் எது தெரியுமா?
இந்த பட்டியலில், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் 8.12 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. கத்தார் ஏர்வேஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் முறையே 8.11 மற்றும் 8.04 மதிப்பெண்களைப் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. உலகில் மிக மோசமாக செயல்படும் விமான நிறுவனமாக துனிசேர், பட்டியலில் கடைசியாக 109 இடத்தில் உள்ளது. இந்த பகுப்பாய்வு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான தரவுகளை உள்ளடக்கியது. சரியான நேரத்தில் செயல்திறன், வாடிக்கையாளர் உரிமைகோரல் செயலாக்கம் மற்றும் 54 நாடுகளில் உள்ள பயணிகளிடமிருந்து உணவு, வசதி மற்றும் சேவை பற்றிய கருத்துக்களை உள்ளடக்கியது.
கணக்கெடுப்பின் நம்பத்தன்மையை சந்தேகிக்கும் இண்டிகோ
"இந்தியாவின் மிகவும் விருப்பமான விமான நிறுவனமாக, IndiGo இந்த கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளை மறுக்கிறது மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில், மலிவு, மரியாதையான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது,"என்று இண்டிகோ விமானம் தனது பதில் அறிக்கையில் கூறியது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை, சரியான நேரத்தில், மலிவு மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவங்களை வழங்குவதாகவும் விமான நிறுவனம் கூறுகிறது. அதே நேரத்தில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) தரவு கூட இண்டிகோவின் கூற்றுகளை ஆதரிக்கிறது. இண்டிகோ 10,000 பயணிகளுக்கு வெறும் 0.2 புகார்களை மட்டுமே பதிவு செய்துள்ளதாக அக்டோபர் விமானப் போக்குவரத்து அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இது நாட்டிலேயே குறைவான புகார் அளிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஒன்றாகும்.