LOADING...
ஹோட்டல் நடத்துவோருக்கு அடித்தது ஜாக்பாட்: கிடுகிடுவென குறைந்த வணிக சிலிண்டர் விலை
வணிகப் பயன்பாட்டு LPG சிலிண்டர்களின் விலையை கணிசமாகக் குறைந்துள்ளன

ஹோட்டல் நடத்துவோருக்கு அடித்தது ஜாக்பாட்: கிடுகிடுவென குறைந்த வணிக சிலிண்டர் விலை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 01, 2026
09:14 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச சந்தையில் நிலவி வந்த எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஓரளவுக்கு தணிந்துள்ள நிலையில், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிகப் பயன்பாட்டு எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விலையை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த அதிரடி விலை மாற்றம் இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த எரிவாயு விலை, தற்போது முதன்முறையாகக் குறைக்கப்பட்டிருப்பது வர்த்தகர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

விலை நிலவரம்

சென்னையில் புதிய சிலிண்டர் விலை நிலவரம்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்புக்கு முன்னதாக ரூ.3,283 ஆக இருந்த 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை, இன்று முதல் ரூ.3,106.50 ஆகக் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலைக்குறைப்பு உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பெரும் நிதியுதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை பெருமளவில் குறைக்கப்பட்டாலும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.957.50 என்ற பழைய விலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.

காரணம்

சர்வதேச காரணிகளும், விலை சரிவும்

கடந்த சில மாதங்களாக ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கி, கச்சா எண்ணெய் மற்றும் சர்வதேச எரிவாயு விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதன் காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடந்த நான்கு மாதங்களாகச் சிலிண்டர் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வந்தன. தற்போது அமெரிக்கா - ஈரான் இடையேயான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையால் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து சீராகியுள்ளதே இந்த விலைக்குறைப்புக்கு முக்கியக் காரணமாகும்.

Advertisement