Loading...
சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்?
சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது

சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 21, 2026
08:08 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்கள் ஏற்கனவே முன்னணி தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ள சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களையும் பொது-தனியார் பங்களிப்பு (PPP) மாதிரியின் கீழ் அடுத்த கட்டமாகத் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கோரிக்கை

தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கை

சென்னை விமான நிலையத்தின் சேவைத் தரம், பயணிகள் வசதி, விமானப் போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளும் திறன் ஆகியவை சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மயமாக்கவேண்டும் என்றும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இதன் சேவைகளை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

சென்னை விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 2.30 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளது.

புதிய முனையம் திறக்கப்பட்ட பிறகு இதன் வருடாந்திரக் கையாளும் திறன் 3.5 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PPP மாதிரி

PPP மாதிரியின் முக்கிய அம்சங்கள்

செயல்பாடு, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்த விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு மட்டுமே தனியார் வசம் ஒப்படைக்கப்படும். விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு (ATC) மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் தொடர்ந்து AAI வசமே இருக்கும்.

இதன் மூலம் AAI-க்கு கட்டணங்கள் வாயிலாகவும், முன்பணங்கள் வாயிலாகவும் கணிசமான வருவாய் கிடைக்கும்.

ஏற்கனவே திருச்சி உள்ளிட்ட 11 மண்டல விமான நிலையங்களை 5 தொகுப்புகளாக பிரித்து 50 ஆண்டுகளுக்கு தனியாரிடம் குத்தகைக்கு விடக் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களும் இப்பட்டியலில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT