சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைத்தது மத்திய அரசு: பண்டிகைக் காலத்தில் விலை குறைய வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வரவுள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 60 சதவீதத்தை இந்தோனேசியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய் விலை 2 தவணைகளாக 10 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்தது. மேலும், மேற்காசியப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 15 சதவீதம் வரை அதிகரித்ததால், உள்நாட்டிலும் விலை உயர்த்தப்பட்டது.
புதிய சுங்க வரி
மத்திய நிதியமைச்சகத்தின் புதிய சுங்க வரிப் பட்டியல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வரி விலக்கு விவரங்கள்:
சுத்திகரிக்கப்படாத பாமாயில் & சோயாபீன் எண்ணெய்க்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய்க்கு 10 சதவீதமாக இருந்த சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டு 0 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் & சோயாபீன் எண்ணெய்க்கு சுங்க வரி 32.5 சதவீதத்திலிருந்து 27.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரி 22.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையின் காரணமாக, பண்டிகை காலத்தில் சில்லறை விற்பனைச் சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.