விமான எரிபொருள் விலை உயர்வு: மத்திய அரசிடம் இந்திய விமான நிறுவனங்கள் அவசர கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆசியப் பகுதியில் தொடரும் போர் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், நிதியுதவி மற்றும் வரி விலக்குகளைத் தொடர கோரி இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு(FIA) மத்திய அரசுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எஃப்.ஐ.ஏ, வழக்கமாக நிறுவனங்களின் மொத்த செலவில் 30 முதல் 40 சதவீதமாக இருக்கும் எரிபொருள் செலவு, தற்போது 55 முதல் 60 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் குத்தகை மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் அதிகரித்து செயல்பாட்டுச் செலவுகள் வெகுவாக உயர்ந்துள்ளன.
கோரிக்கை
அரசின் நிவாரண நடவடிக்கைகளை தொடர கோரிக்கை
ஏற்கனவே ஏப்ரல் முதல் ஜூன் வரை வழக்கப்பட்ட எடிஎஃப் (ATF) விலை வரம்பு, டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் எரிபொருள் மீதான வாட் வரியை 7 சதவீதமாகக் குறைத்தது மற்றும் தரையிறங்குதல் கட்டணக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துள்ள எஃப்.ஐ.ஏ, தற்போதைய சூழலில் இந்த நிவாரணங்களைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
தவறும்பட்சத்தில் சில வழித்தடங்களில் சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.
எரிபொருள் விலை உயா்வின் தாக்கத்தைச் சமாளிக்க இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயா்த்தியுள்ளது.
இதன் காரணமாக உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பயணத் தூரத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.