வெளிநாடு செல்பவர்களுக்கு குட் நியூஸ்! ஏர் இந்தியா அறிமுகம் செய்யும் இலவச 'EasyRoam' சிம் சேவைகள்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ஏர் இந்தியா நிறுவனம் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'EasyRoam' எனும் புதிய சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் ஆங்காங்கே உள்ள உள்ளூர் சிம் கார்டுகளை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க இச்சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகள் ஏர் இந்தியாவின் பிரத்யேக இணையதளப் பக்கம் மூலம் சிம் கார்டு (Physical SIM) அல்லது இ-சிம் (eSIM) வடிவில் இதனைப் பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை மூலம் பயணிகள் வெளிநாடுகளில் தடங்கலற்ற மொபைல் டேட்டா மற்றும் குரல் அழைப்பு சேவைகளைப் பெற முடியும்.
விவரங்கள்
கட்டணம் மற்றும் சலுகை விவரங்கள்
இத்தொடக்கக் கட்டத்தில் ஏர் இந்தியா இந்த 'EasyRoam' சிம் கார்டை இலவசமாக வழங்குகிறது.
இருப்பினும், பயணிகள் தாங்கள் செல்லும் நாட்டிற்கான சர்வதேச ரோமிங் பேக்குகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
வட அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஆசிய பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட 30 நாடுகளில் தற்போது இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ரோமிங் திட்டங்களின் தொடக்கக் கட்டணம் வரி விலக்க விலையாக ₹241 முதல் தொடங்குகிறது.
மாலத்தீவு மற்றும் மொரீஷியஸ் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கான டேட்டா திட்டங்களிலும் 1GB கூடுதல் இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
விரிவாக்கம்
எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள்
தற்போது 30 நாடுகளில் மட்டுமே கிடைக்கும் இச்சேவையை, படிப்படியாக 190க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்த ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
பயணிகள் தங்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட நாட்டிற்கான அல்லது உலகளாவிய திட்டங்கள், டேட்டா மற்றும் வாய்ஸ் பிளான்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
மேலும், பயன்பாட்டு எச்சரிக்கைகள் மற்றும் குறைந்த கட்டணத்தில் தங்களின் பழைய எண்ணை ஒரு வருடம் வரை தக்கவைத்துக்கொள்ளும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.