Loading...
சென்னையில் காலடி வைத்த ரோல்ஸ் ராய்ஸ்! ஜிஎஸ்டி சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு
ரோல்ஸ் ராய்ஸ், தனது ஷோரூமை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் திறந்துள்ளது

சென்னையில் காலடி வைத்த ரோல்ஸ் ராய்ஸ்! ஜிஎஸ்டி சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2026
05:00 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், இந்தியாவில் தனது இரண்டாவது அதிகாரப்பூர்வ ஷோரூமை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் திறந்துள்ளது. மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இயங்கி வரும் பிரத்யேகப் பணிமனைகளை தொடர்ந்து, இந்தியாவின் இரண்டாவது பிரம்மாண்ட ஷோரூமாக இது அமைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் காரின் சின்னமான 'பேந்தியன் கிரில்' வடிவமைப்பில் இந்த புதிய ஷோரூமின் முகப்பு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப கார்களை தனிப்பயனாக்கம் செய்து வடிவமைத்துக்கொள்ளும் பிரத்யேக அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய கலை மற்றும் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் 'Cabinet of Curiosities' பிரிவும் இந்த மையத்தில் இடம் பெற்றுள்ளது.

பந்தம்

நூற்றாண்டைக் கடந்த இந்திய வாடிக்கையாளர்களின் பந்தம்

லண்டன் குட்வுட் நகரிலிருந்து இணையவழியில் நடைபெற்ற திறப்பு விழாவில் பங்கேற்ற ரோல்ஸ் ராய்ஸ் விற்பனைப் பிரிவு இயக்குனர் ஜூலியன் ஜென்கின்ஸ் பேசுகையில், "இந்திய வாடிக்கையாளர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களைத் தங்களுக்கு ஏற்ப வடிவமைத்து வாங்கி வருகின்றனர். ரோல்ஸ் ராய்ஸின் வரலாற்றுப் பயணத்தில் இந்தியாவிற்குப் பிரத்யேக இடம் உண்டு" எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தியா - பிரிட்டன் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் ஆட்டோமொபைல் துறைக்கும் சாதகமான சூழலை உருவாக்கும் என நம்புவதாகக் கூறிய அவர், ரோல்ஸ் ராய்ஸின் மின்சார காரான 'ஸ்பெக்டர்' இந்தியச் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ADVERTISEMENT