ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவில் தயாராகும் 2 எஸ்யூவிகள்; அவை எவை?
ஜப்பானிய கார்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகம். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது அரிதாகவே நடக்கும். இப்போது, குறைந்தது இரண்டு எஸ்யூவிகள் உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையான இந்தியாவிலிருந்து, ஜப்பானுக்கு அனுப்பப்படுகின்றன. இவை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் கார்களாகும். இவை முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களாகும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள்
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஃப்ரான்க்ஸ் ஏற்றுமதி இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இது ஜப்பானில் அறிமுகப்படுத்தப்படும் முதல் மாருதி சுஸுகி எஸ்யூவி ஆகும். ஏற்கனவே மாருதி நிறுவனம் 2016 இல் இந்த குட்டி தீவு நாட்டிற்கு பலேனோவை ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகியின் தாய் நிறுவனமான சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனால் 3வது காலாண்டில் Fronx ஜப்பானில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு எலிவேட்டை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது ஹோண்டா. எலிவேட், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹோண்டா மாடல் ஆகும். எலிவேட் ஜப்பானிய சந்தையில் WR-V பிராண்ட் பெயரில் விற்கப்படுகிறது.