பாகிஸ்தானின் வாகன சந்தையை மிஞ்சிய, இந்தியாவின் மாருதி வேகன்ஆர் விற்பனை
பிப்ரவரி 2024இல், இந்தியாவின் வாகன சந்தை விற்பனையில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டது. குறிப்பாக அதன் அண்டை நாடான, பாகிஸ்தானை விஞ்சியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தானின் கார் தொழில்துறை விற்பனையில் 57% அதிகரித்து, மொத்தம் 9,709 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 3.7 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மாருதி சுசுகி வேகன்ஆர் மட்டும், இந்தியாவில் 19,412 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. அதாவது, பாகிஸ்தான் முழுவதும் விற்பனை செய்யப்பட்ட மொத்த கார்களின் எண்ணிக்கையை விட, இது இரண்டு மடங்கு அதிகம்.
பாகிஸ்தானின் ஆட்டோமொபைல் சந்தை சந்திக்கும் பிரச்சனைகள்
அதிகரித்து வரும் கார் விலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானின் ஆட்டோமொபைல் துறை போராடி வருகிறது. 2024 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், கார் விற்பனை 41% சரிவடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் வாகன சந்தை குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துவருகிறது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 59,699 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக பிசினஸ் ரெக்கார்டரின் அறிக்கை தெரிவிக்கிறது. அதிகரித்து வரும் கார் விலைகள், விலையுயர்ந்த நிதியளிப்பு விருப்பங்கள் மற்றும் குடிமக்களின் வாங்கும் சக்தியின் ஒட்டுமொத்த குறைவு போன்ற காரணிகளால் இந்த சரிவு ஏற்படுகிறது. எனினும், பிப்ரவரி 2024இல், மலிவு விலை கார் மாடல்களுக்கான தேவை அதிகரித்தது. பிப்ரவரி-2023 உடன் ஒப்பிடும்போது 520% விற்பனை அதிகரிப்புக்கு பங்களித்த, பாக் சுஸுகியின் ஆல்டோ, நாட்டின் மிகவும் பிரபலமான பயணிகள் வாகனமாக உருவெடுத்தது.
இந்திய வாகன சந்தை ஏற்றம்; மாருதி சுஸுகி முன்னணி
இந்தியாவின் வாகனச் சந்தை செழித்து வருகிறது. சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகளவில் மூன்றாவது பெரிய வாகனச் சந்தையாக அதன் இடத்தைப் தக்கவைத்து வருகிறது இந்தியா. மாருதி சுஸுகி வேகன்ஆர், பிப்ரவரி 2024 இல் 19,412 யூனிட்களை விற்பனை செய்து சிறந்த நிறுவனமாக உருவெடுத்தது. தொடர்ந்து டாடா பன்ச் மற்றும் மாருதி சுசுகி பலேனோ ஆகியவை முறையே 18,438 யூனிட்கள் மற்றும் 17,517 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. மற்ற சிறந்த மாடல்களில் மாருதி சுசுகி டிசையர் மற்றும் பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகியவை அடங்கும். இந்த புள்ளிவிவரங்கள் பாகிஸ்தானின் போராடி வரும் தொழில்துறையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வலுவான வாகன சந்தை செயல்திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.