
ஜனவரியில் உயரும் கார்களின் விலை; அறிவிப்பை வெளியிடும் நிறுவனங்கள்
செய்தி முன்னோட்டம்
ஜனவரி மாதம் புதிய காரை வாங்க வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தால், அதனை வாடிக்கையாளர்கள் மறுபரிசீலனை செய்வது நல்லது. ஏனெனில், ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தங்களது கார்களின் விலையை உயர்த்த பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.
சில நிறுவனங்கள் எவ்வளவு விலையேற்றம் செய்யவிருக்கின்றன என்ற விபரங்களையும் வெளியிட்டிருக்கும் நிலையில், சில நிறுவனங்கள் விலையேற்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டிருக்கின்றன.
ஒவ்வொரு நிறுவனத்திலும், அதன் கார் மாடலைப் பொருத்து விலை உயர்வும் நிர்ணயிக்கப்படவிருக்கிறது எனவே, புதிய கார் வாங்க விரும்புபவர்களுக்கு இந்த டிசம்பர் சிறந்த மாதமாக இருக்கும்.
தற்போது வரை, மாருதி சுஸூகி, ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, ஹோண்டா, எம் மோட்டார் மற்றும் ஆடி ஆகிய நிறுவனங்கள் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன.
ஆட்டோ
ஏன் இந்த விலையேற்றம்?
கடந்த சில ஆண்டுகளாகவே ஆண்டுக்கு இரண்டு முறை விலையேற்றம் என்பதனை கார் தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாக்கியிருக்கின்றன.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸூகி கார்களின் விலை கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 16.7% அதிகரித்திருக்கிறது. இதே போல் இந்தியாவில் கார்களை விற்பனை செய்து வரும் அனைத்து நிறுவனங்களும், தங்களது கார்களின் விலையை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
உயர்ந்து வரும் மூலப் பொருட்களின் விலை, பணவீக்கம் மற்றும் விநியோகச் சங்கிலிக் கட்டண உயர்வு ஆகியவையே பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையேற்றத்துக்குக் குறிப்பிடும் காரணங்களாக இருக்கின்றன.