சீன உதிரிபாகங்களை கொண்டு ஏவுகணை தயாரிக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள்: 'காஃப்ப்ளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச்' பரபரப்பு அறிக்கை
செய்தி முன்னோட்டம்
ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேலை இலக்கு வைத்துத் தாக்கும் வகையில் அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக, சீன தயாரிப்பு உதிரிபாகங்களை பெற முயல்வதாக சர்வதேச ஆயுதக் கண்காணிப்பு அமைப்பான 'காஃப்ப்ளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச்' தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏமன் ஏடன் துறைமுகப் பகுதியிலும் பிற இடங்களிலும் கைப்பற்றப்பட்ட இரு வேறு கப்பல் சரக்குகளை ஆய்வு செய்ததில், ஹூதிகள் வசமுள்ள அல் ஹுடைடா துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படவிருந்த அதிநவீன ஏவுகணை உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஏவுகணை உதிரிபாகங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கப்பல்களும், சீன உதிரிபாகங்களும்
ஈரானின் 2,000 கிலோமீட்டர் வரை பாயக்கூடிய 'கைய்பர் ஷேகான்' ரகப் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஒத்த அமைப்பை உருவாக்கவே இந்த உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
ஸ்டெபிலைசிங் ஃபின் கோர்கள், ராக்கெட் மோட்டார் இக்னைட்டர்கள் மற்றும் ஏவுகணை வளிமண்டலத்தில் பறக்கும் போது ஏற்படும் வெப்பத்தைத் தாங்கும் 'ஃபினாலிக் ரெசின்' போன்ற பிரத்யேக ராணுவப் பயன்பாட்டுப் பொருள்கள் இதில் அடங்கும்.
வெளிநாடுகளில் இருந்து முழுமையான ஏவுகணைகளைப் பெறுவதற்குப் பதிலாக, உதிரிபாகங்களை இறக்குமதி செய்து ஏமனுக்குள்ளேயே அதிநவீன ஏவுகணைகளை அசெம்பிள் செய்யும் அளவுக்கு ஹூதிகளின் தொழில்நுட்பத் திறன் உயர்ந்துள்ளதாக சி.ஏ.ஆர் (CAR) மூத்த பகுப்பாய்வாளர் ஃபேபியன் ஹின்ஸ் எச்சரித்துள்ளார்.
பதில்
உள்ளூர் உற்பத்தி முயற்சி குறித்து சீன தூதரகத்தின் பதில்
இதனிடையே, வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு சாங் பேசுகையில், சீனா இராணுவப் பொருட்களின் ஏற்றுமதியை கடுமையாகக் கட்டுப்படுத்தி வருவதாகவும், சர்வதேச விதிமுறைகளை சீராக பின்பற்றி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மீதான ஹூதிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த புதிய ஆய்வு முடிவுகள் மத்திய கிழக்கில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.