விமான நிலையத்திற்கே நேரில் சென்ற டிரம்ப்! 11 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா வந்தடைந்த ஜி ஜின்பிங்கிற்கு ரெட் கார்பெட் வரவேற்பு
செய்தி முன்னோட்டம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசுமுறை பயணமாக வாஷிங்டன் சென்றடைந்தார். மேரிலாந்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் ராணுவ விமான தளத்தில் தரையிறங்கிய அவரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் நேரில் சென்று ரெட் கார்பெட் விரித்து மிக பிரம்மாண்டமாக வரவேற்றனர். கடந்த 2015-இல் போப் பிரான்சிஸை பராக் ஒபாமா வரவேற்ற பிறகு, 11 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் ஒருவர் விமான தளத்திற்கு நேரில் சென்று வெளிநாட்டுத் தலைவரை வரவேற்பது இதுவே முதன்முறையாகும்.
உடன்படிக்கை
வர்த்தகப் போர் மற்றும் அணு ஆயுதத் தடையை நீட்டிக்க உடன்பாடு
இரண்டு தலைவர்களின் சந்திப்பிற்கு முன்னதாக, அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் நிறுத்தக் கெடு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹி லிஃபெங் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த வர்த்தகக் கெடு வரும் ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பின் போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ), போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் ராணுவங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது.
தைவான் விவகாரம்
தைவான் விவகாரமும் அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளும்
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் தைவான் விவகாரம் மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தைவான் மீதான தனது உரிமையை ஜி ஜின்பிங் மீண்டும் வலியுறுத்துவார் என்றும், தைவானுக்கு அமெரிக்கா வழங்கும் $11 பில்லியன் டாலர் ஆயுத விற்பனையைக் குறைக்க வலியுறுத்துவார் என்றும் தெரிகிறது.
அதே வேளையில், சீனாவுக்கான அதிநவீன தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா மறுத்து வருகிறது.
இந்த முரண்பாடுகளுக்கு இடையே இரு தலைவர்களும் தங்களின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க தீவிரமாக முயன்று வருகின்றனர்.
ஈரான் போர் சூழல்
ஈரான் போர் சூழலும் வெள்ளை மாளிகையின் பிரம்மாண்ட விருந்தும்
மத்திய கிழக்கில் ஈரான் மீதான போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள சீன அதிபரின் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
இருப்பினும் சீனாவின் உதவி தங்களுக்குத் தேவையில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை இரவு நடைபெறும் சிறப்பு விருந்தில் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், என்விடியா தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் மற்றும் ஓபன்ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட பல முன்னணி தொழில்நுட்ப பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.