உலக ஓசோன் தினம்: ஓசோன் படலத்தைப் பாதுகாக்க கைகோர்த்த உலக நாடுகள்
ஒரு ஆண்டின் பல்வேறு நாட்களில் பல்வேறு சர்வதேச தினங்களைக் கொண்டாடுகிறோம். அது போல் இன்றைய செப்டம்பர் 16ம் நாளானது உலக ஓசோன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஓசோன் படலத்தைப் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தவும், அதனைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தவுமே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் நாள் உலக ஓசோன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஓசோன் படலம் என்றால் என்ன? அது எப்படி நம்மைப் பாதுகாக்கிறது? அது எப்படி அழியும் நிலைக்குச் சென்றது? அதனை மீட்பதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளித்ததா? பார்க்கலாம்.
ஓசோன் படலம்:
மூன்று ஆக்ஸிஜன் அனுக்கள் நிறைந்த பல்வேறு மூலக்கூறுகளால் ஆனது ஓசோன் படலம். பூமியின் மேற்பரப்பில் இருந்து 15 முதல் 30 கிமீ வரையிலான தூரத்தில் அமைந்திருக்கும் அடுக்கு மண்டலத்தில் இடம்பெற்றிருக்கிறது ஓசோன் படலம். சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களை (UV Rays) தடுத்து பூமியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் ஓசோன் படலத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. முக்கியமாக, UVB வகை கதிர்வீச்சை தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது ஓசோன் படலம். இந்த UVB வகைக் கதிர்களானது, மனிதர்களுடைய உடம்பில் தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்தவல்லது.
ஓசோன் படலத்தில் விழுந்த துளை:
ஓசோன் படலம் என்பது நிரந்தரமான ஒன்று தான் என்றாலும், அதிலிருக்கும் மூலக்கூறுகள் நிரந்தரமானவை அல்ல. புதிய மூலக்கூறுகள் உருவாகி ஓசோன் படலத்தில் இணைய, பழைய மூலக்கூறுகள் அழியும். இது ஒரு நிரந்தரமான செயல்முறை. ஆனால், 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் உலகளவில் ஏற்பட்ட தொழிற்புரட்டசி, தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. தொழிற்சாலைகள் மட்டுமின்றி தொடர்ந்து உயர்ந்து வந்த வாகனங்களும் இணைந்து பல்வேறு வகையில் காற்று மாசுபாடத் தொடங்கியது. பூமியில் மனிதர்கள் உருவாக்கிய சில பொருட்கள் மற்றும் இரசாயனங்களிலிருந்து வெளியாகும் புரோமின் மற்றும் குளோரின் உள்ளிட்ட சில வேதிப் பொருட்கள் ஓசோன் மண்டலம் உருவாவதை விட வேகமான அதன் மூலக்கூறுகளை அழிக்கத் தொடங்கின. இதன் காரணமாக ஓசோன் மண்டலத்தின் அடர்த்தி குறைந்து, அதில் துளையும் விழுந்தது.
தற்காப்பு நடவடிக்கை:
1985ம் ஆண்டு ஓசோன் மண்டலத்தின் அடர்த்தி குறைந்திருப்பதையும், அதில் துளை விழுந்திருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிகிறார்கள். பூமியின் இயற்கைப் பாதுகாப்பு அடுக்கான ஓசோனில் துளை விழுந்தது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளையை சீர் செய்யும் பொருட்டு, 1987ம் ஆண்டு மாண்ட்ரியல் நெறிமுறையில் உலகின் அனைத்து நாடுகளாளும் கையெழுத்திட்டன. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே நெறிமுறை இந்த மாண்ட்ரியல் நெறிமுறை தான். இந்த மாண்ட்ரியல் நெறிமுறையின்படி, ஓசோனை பாதிக்கும் வகையிலான பொருட்கள் மற்றும் இராசயனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். அந்த இரசாயனங்கள் மற்றும் பொருட்களுக்கான மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும். மாண்ட்ரியல் நெறிமுறையின்படி ஓசோன் படலத்தைக் காக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கத் தொடங்கின.
தற்போது எந்த நிலையில் இருக்கிறது ஓசோன் படலம்?
மாண்ட்ரியல் நெறிமுறையின் படி ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைக்கத் தொடங்கியதன் பயனாக, கொஞ்சம் கொஞ்சமா தன்னைத் தானே சீரமைத்து வருகிறது ஓசோன் படலம். தற்போது இருப்பதைப் போலவே, அனைத்து நாடுகளும் தொடர்ந்து ஒத்துழைத்தால் அடுத்த 40 ஆண்டுகளில் ஓசோன் படலம் முழுமையாகக் குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 1987ல் மாண்டரியில் நெறிமுகை கையழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கு ஓசோன் படலம் குறித்தும் அதனைப் பாதுகாப்பதன் அவசியத்தைக் குறித்தும் உணர்த்த, 1994ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதியை சர்வதேச ஓசோன் தினமாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை.
இந்த காலவரிசையைப் பகிரவும்