'போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை' - இஸ்ரேல் பிரதமர் உறுதி
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் கடந்த 7ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
ஹமாஸ் குழுவினர் இந்த தாக்குதலை துவங்கிய நிலையில், இஸ்ரேல் தனது பதில் தாக்குதலை துவங்கியது.
இப்போரில் பல்லாயிர கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னமும் இதற்கான சமாதான நிலை எட்டப்படவில்லை.
இவர்களின் மத்தியில் சிக்கி தவிக்கும் காசா பகுதி மக்கள் உண்ண உணவு, குடிநீர், மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வீதியில் உலா வரும் அவலநிலை அங்கு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
போர்
'போரில் வெற்றிப்பெறும் வரை இஸ்ரேல் போராடும்' - பிரதமர்
அப்போது அவர், "காசாவில் போர் நிறுத்தம் குறித்த இஸ்ரேல் நாட்டின் நிலைப்பாட்டினை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல் ஹமாஸ் குழுவிடம் சரணடைவதற்கு சமம். அவ்வாறு செய்தால் பயங்கரவாதத்திற்கு அடிபணிவது போல் ஆகிவிடும். அது ஒருபோதும் நடக்காது" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் நடந்த பியர்ஸ் ஹார்பர் தாக்குதல் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த பின்னர் அந்நாடு போர் நிறுத்தம் என்பதை நிராகரித்தது என்றும்,
அதே போல் தான் இஸ்ரேலும், வெற்றியடையும் வரை போராடும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.