'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ
கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக மீண்டும் தனது குற்றச்சாட்டை வலியுறுத்தியுள்ளார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. மேலும் தனது நாடு "சட்டத்தின் ஆட்சிக்கு எப்போதும் துணை நிற்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.' நிஜ்ஜார் கொல்லப்பட்டது பற்றிய குற்றசாட்டுகளை விசாரிக்க அமெரிக்கா உட்பட பல நட்பு நாடுகளை அணுகியதாகவும், இந்த விவகாரம் குறித்து மேலும் அறிய இந்தியாவை அணுகியதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து, காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது. இதனால், இந்திய-கனட உறவுகள் சேதமடைந்துள்ளன.
மேலும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி இருப்பதாவது:
இது மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம். சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு ஏஜென்சிகள் தங்கள் பணியை தொடர்ந்து செய்து வருவதால், அனைத்து நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். கனடா எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்கு துணை நிற்கும் நாடாக இருக்கும். ஏனென்றால், பெரிய நாடுகள் சர்வதேசச் சட்டத்தை மதிக்காமல் மீறினால், அது உலகில் உள்ள அனைவரையும் ஆபத்தில் தள்ளிவிடும். நாங்கள் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாகவும் நேர்மறையாகவும் பணியாற்ற முயற்சித்துள்ளோம். தொடர்ந்து அதே போல் செயல்படுவோம். இந்தியாவும் கனேடிய அரசாங்க இராஜதந்திரிகளுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இப்படி ஒரு சண்டையை இப்போது நடத்த எங்களுக்கும் விருப்பம் இல்லை. ஆனால் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்கு துணை நிற்போம்.