ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பிய வடகொரியா: சாட்டிலைட் ஆதாரங்களை வெளியிட்டது அமெரிக்கா
ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அந்த கூற்றுக்களை நிரூபிக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களில், வட கொரியா 1,000க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு வழங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். வடகொரியா, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பியதாக கூறிய வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரிகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவாக்கப்பட்ட இராணுவ உறவைப் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளனர். மேலும், இதை ஒரு தொந்தரவு தரும் வளர்ச்சி என்றும் அவர்கள் விவரித்துள்ளனர்.
வட கொரியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா
மேலும், இந்த கூற்றுகளை நிரூபிக்கும் வகையில், வட கொரிய வெடிமருந்துக் கிடங்கில் இருந்து ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டு, பின்னர் ரயில் மூலம் ரஷ்யாவின் தென்மேற்கு எல்லைக்கு அருகில் உள்ள சேமிப்பு நிலையத்திற்கு அந்த ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களின் தொகுப்பையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், செப்டம்பர் 7 மற்றும் அக்டோபர் 1-க்கு இடையில் இந்த ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். "உக்ரேனிய நகரங்களைத் தாக்கவும், உக்ரேனிய பொதுமக்களைக் கொல்லவும், மேலும் ரஷ்யாவின் சட்டவிரோதப் போரைத் தொடரவும் பயன்படுத்தப்படும் இந்த இராணுவ உபகரணங்களை ரஷ்யாவிற்கு வழங்கியதற்காக வட கொரியாவை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று கிர்பி கூறியுள்ளார்.