அமெரிக்காவில் 'டிரம்ப் டிவி' தொடக்கம்: முன்னணி ஊடகங்களுக்குத் தடை விதித்த வெள்ளை மாளிகை
செய்தி முன்னோட்டம்
CNN, MS NOW மற்றும் பொலிட்டிகோ ஆகிய முன்னணி செய்தி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதித்த சில நாட்களிலேயே, அமெரிக்க அதிபர் மாளிகை 'டிரம்ப் டிவி' என்ற நேரலை வீடியோ தளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் யூடியூப் தளத்தில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. "24/7 நேரலை. இரவு 7 மணிக்குத் தொடக்கம்" என்ற விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட இந்த தளத்தில், டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்புகள், உரைகள் மற்றும் சிறப்புக் காணொளிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டனம்
செய்தி ஊடகங்கள் வழக்கு மற்றும் கண்டனம்
தனக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி செய்தி நிறுவனங்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்ததற்கு எதிராக, CNN, MS NOW மற்றும் Politico ஆகிய அமைப்புகள் வாஷிங்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தம் வழங்கும் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் இந்தத் தடை உள்ளதாகச் செய்தி நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும் ABC, CBS, Fox News மற்றும் NBC உள்ளிட்ட முன்னணித் தொலைக்காட்சிகளும் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
விளக்கம்
டொனால்ட் டிரம்பின் விளக்கம்
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள அதிபர் டிரம்ப், போலிச் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் 'ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்' எனத் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிபர் மாளிகையான ஓவல் அலுவலகத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டியது அவசியம் என்றும், ஆதாரமற்ற பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.
செய்தி ஊடகங்களின் எதிர்ப்பு மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு இடையே, வெள்ளை மாளிகையின் இந்த சொந்த செய்தி சேவை முயற்சி சர்வதேச ஊடக உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.