அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 5 பேர் மீது தாக்குதல், மக்கள் வெளியே வரத் தடை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வடக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ள லோகன் சர்க்கிள் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்னமும் பிடிபடாமல் நடமாடிக் கொண்டிருப்பதால், பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனக் காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
உச்சகட்டப் பதற்றம்
வெள்ளை மாளிகை அருகே உச்சகட்டப் பதற்றம்
காவல்துறை அதிகாரி நாதன் கிளார்க் கூறுகையில், பல்வேறு இடங்களிலிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
வடமேற்கு டி.சி-யின் பகுதியை போலீசார் முற்றிலுமாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சீல் வைத்துள்ளனர்.
அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அருகிலுள்ளவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் 'VIDA ஃபிட்னஸ் மையம்', 'செயின்ட் லூக்ஸ் தேவாலயம்' மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் அமைந்துள்ளன.
ATF அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்தோ அல்லது சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டார்களா என்பது குறித்தோ காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிடவில்லை.
பாதுகாப்புப் பின்னணி
லோகன் சர்க்கிள் பகுதியின் பாதுகாப்புப் பின்னணி
வெள்ளை மாளிகைக்கு மிக அருகில் நடந்து செல்லும் தொலைவில் உள்ள லோகன் சர்க்கிள் பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு பிரச்சினைகள் நிலவி வருகின்றன.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் இதே பகுதியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசாங்கத் திறன் துறையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் மீது கும்பல் ஒன்று கார் திருடும் முயற்சியில் தாக்குதல் நடத்தியது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தைத் தாண்டி வாஷிங்டன் டி.சி-யை நேரடி மத்தியக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த அதிபர் டிரம்ப், குற்றங்களைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தேசிய காவல்படை வீரர்களைக் குவித்தார்.
அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதும் நீடித்து வரும் நிலையில்தான் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.