Loading...
சைபீரியா பிளேக் மரணத்தால் அமெரிக்கா அதிரடி நடவடிக்கை; ரஷ்யாவிற்குப் பறந்த எச்சரிக்கை
சைபீரியா பிளேக் மரணத்தால் ரஷ்யாவை தீவிரமாக கண்காணிக்கும் அமெரிக்கா

சைபீரியா பிளேக் மரணத்தால் அமெரிக்கா அதிரடி நடவடிக்கை; ரஷ்யாவிற்குப் பறந்த எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
01:33 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள இர்குட்ஸ்க் பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 28 வயது பெண் ஆய்வாளர் தார்யா ஷிபிலோவா உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நிலமையை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், நிலவரத்தை அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் (CDC) இணைந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் நோய் தடுப்பு மையம் தீவிர கண்காணிப்பு

பிளேக் நோய் தொடர்பான துல்லியமான தகவல்களை ரஷ்ய அரசு உடனடியாகவும் வெளிப்படையாகவும் சர்வதேச சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்கச் சுகாதாரத் துறை அதிகாரிகள் ரஷ்யாவின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

தற்போதைக்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நேரடி வணிக ரீதியிலான விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை என்றாலும், கூடுதல் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சர்ச்சை

உயிரியல் ஆய்வகங்கள் குறித்த சர்ச்சை

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழு உறுப்பினரான டான் பேக்கன், உக்ரைனில் அமெரிக்க ஆதரவு பெற்ற உயிரியல் ஆய்வகங்கள் இருப்பதாக ரஷ்யா முன்பு குற்றம் சாட்டியதைப் சுட்டிக்காட்டினார்.

அத்தகைய ஆய்வகங்கள் ரஷ்யாவில்தான் உள்ளன என்றும், இதுவே அதற்குச் சான்று என்றும் அவர் சாடினார்.

இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கும் உயிரியல் ஆயுதத் தயாரிப்பிற்கும் தொடர்பு உள்ளதாக எந்தவொரு நேரடி ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.

ADVERTISEMENT

தனிமைப்படுத்தல்

200 பேர் தனிமைப்படுத்தல் மற்றும் குற்றவியல் வழக்கு

செப்டம்பர் 25 அன்று பிளேக் பாக்டீரியா அடங்கிய டெஸ்ட் ட்யூப் உடைந்ததால் தார்யா ஷிபிலோவா பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் சிகிச்சைப் பெற்ற ஷெலெகாவ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சுமார் 189 பேர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இர்குட்ஸ்க் ஆளுநர் இகோர் கோப்சேவ், கண்காணிப்பில் உள்ள எவருக்கும் நோய் அறிகுறிகள் இல்லை என்றும், அவர்களின் பரிசோதனை முடிவுகள் 'நெகட்டிவ்' என வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாதுகாப்பு விதிமீறல்கள் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக ரஷ்யக் காவல்துறை குற்றவியல் வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT