இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா
தெற்கு காசா நகரத்தில் உள்ள ஒரு கூடார முகாமில் தங்கி இருந்த 45 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமெரிக்கா, ரஃபாவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், ரஃபாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் இன்னும் முழு அளவிலான படையெடுப்பாக மாறவில்லை என்றும், அதனால் அமெரிக்கா கிழித்த "சிவப்பு கோடுகளை" இஸ்ரேல் தாண்டவில்லை என்றும் தெரிவித்துள்ளது. செவ்வாயன்று, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, "இது ஒரு சோகமான தவறு என்று இஸ்ரேலே கூறியுள்ளது" என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்காவிடம் அதை அளப்பதற்கான அளவுகோல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஃபா தாக்குதலை தடுக்க அழைப்பு விடுத்தது அல்ஜீரியா
"ரஃபாவில் ஒரு பெரிய தரைப்படை நடவடிக்கையை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றும் நாங்கள் கூறியுள்ளோம். இது ஹமாஸைப் பின்தொடர்ந்து செல்வதை இஸ்ரேலியர்களுக்கு மிகவும் கடினமாக்கும். இது விரிவான சேதம் மற்றும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஏற்படுத்தும். ஆனால் அது போன்ற ஒரு சம்பவம் இன்னும் நடக்கவில்லை. அவர்கள் ரஃபாவை சூறையாடுவதை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை," என்று அவர் கூறியுள்ளார். மேலும், இஸ்ரேல் அரசின் செயல்பாடுகள் பெரும்பாலும் ரஃபாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நடைபாதையில் இருந்தன என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கிடையில், ரஃபாவில் நடக்கும் கொலைகளை தடுக்க அல்ஜீரியா புதன்கிழமை அன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு வரைவு தீர்மானத்தை முன்வைக்க உள்ளது.