இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
பாலஸ்தீனப் போராளி குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தரை-கடல்-வான் தாக்குதலில் பல அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்களின் அடையாளங்கள் போன்ற கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. "பல அமெரிக்க குடிமக்கள் இறந்ததை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். "பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் போரினால் அமெரிக்கர்கள் உயிரிழந்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு அமெரிக்க போர் கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்ப நேற்று உத்தரவிட்டார்.
இஸ்ரேல் போரில் இதுவரை 1,100 பேர் உயிரிழப்பு
தங்களது நட்பு நாடான இஸ்ரேலுக்கு முழு ஆதரவையும் தெரிவிக்க அமெரிக்கா போர் வானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. விமானம் தாங்கி போர்க்கப்பலான USS ஜெரால்ட் R ஃபோர்டு மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்புவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் போர் விமானப் படைகளையும் அந்த பகுதிக்கு அமெரிக்கா அனுப்ப உள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுக்கு எதிராக போர் புரிய உள்ளதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. மூன்று நாட்களாக தொடரும் இந்த மோதலில் இதுவரை 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் மட்டும் 44 இராணுவ வீரர்கள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.