உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்தியது அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாக உக்ரைனுக்கான அமெரிக்க உதவியை "இடைநிறுத்தம்" செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரைன்- ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் டிரம்ப் கவனம் செலுத்துவதாகவும், அந்த இலக்கை அடைய ஜெலென்ஸ்கி "உறுதியுடன்" இருக்க வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உக்ரைனுக்குள் இன்னும் அனுப்பப்படாத அனைத்து இராணுவ உபகரணங்களுக்கும் இந்த இடைநிறுத்தம் பொருந்தும் என்று மற்றொரு வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார்.
தற்காலிகம்
இடைநிறுத்தம் தற்காலிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தை மிகவும் மோசமாக முடிவடைந்ததை ஒட்டி டிரம்ப் இந்த இடைநிறுத்த முடிவை எடுத்துள்ளார் என்று அந்த அதிகாரி கூறினார்.
எனினும், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஜெலென்ஸ்கி புதிய உறுதிப்பாட்டைக் காட்டினால், இடைநிறுத்தம் நீக்கப்படலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ப்ளூம்பெர்க் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கைகளின்படி, நாட்டின் தலைவர்கள் அமைதிக்கான நல்லெண்ண உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் தீர்மானிக்கும் வரை இந்த இடைநிறுத்தம் நீடிக்கும்.
"இது உதவியை நிரந்தரமாக நிறுத்துவது அல்ல, இது ஒரு இடைநிறுத்தம்" என்று டிரம்ப் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
இடைநிறுத்தம்
இடைநிறுத்ததில் எவை அடங்கும்?
டிரம்ப் நிர்வாகத்தின் இடைநிறுத்தம் உக்ரைனுக்கான ஏற்றுமதிகளை முடக்குகிறது.
இதில் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் போன்ற முக்கியமான ஆயுதங்கள் அடங்கும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கனிமவள ஒப்பந்தமும் இதில் அடங்கும்.