Loading...
இந்தியாவிற்கு 100% வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம்? ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் புதிய சர்ச்சை
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிற்கு 100% வரி

இந்தியாவிற்கு 100% வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம்? ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் புதிய சர்ச்சை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
08:01 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது 100% வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நடைமுறை சார்ந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. 'லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026' என அழைக்கப்படும் இந்த மசோதா, பிரதிநிதிகள் சபையில் 214 - 211 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் பெற்று முன்நகர்த்தப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் குடியரசுக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்தது பிரதிநிதிகள் சபைத் தலைமையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மசோதா

மசோதாவின் முக்கிய அம்சங்கள்

ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் முதல் 5 நாடுகளின் (சீனா, இந்தியா உட்பட) மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு இச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீறி எண்ணெய் விநியோகத்தில் ஈடுபடும் 'நிழற்படை' கப்பல்கள் மற்றும் ரஷ்ய உறைவிட அமைப்புகளுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கப்படும்.

ரஷ்யாவுக்கான தடைகளுடன் சேர்த்து, ஈரான் மீதான தற்போதைய தடைகளை மேலும் நீட்டிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

பின்னணி

பின்னணியும் எதிர்ப்பும்

உக்ரைன் மீதான போருக்கு தேவையான நிதியை ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலமே திரட்டுகிறது என அமெரிக்கா கருதுகிறது.

இதைக் கட்டுப்படுத்தவே ஆகஸ்ட் 7-ஆம் தேதி அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

எனினும், ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவரான கிரிகோரி மீக்ஸ் உள்ளிட்டோர் இம்மாசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அமெரிக்க அதிபருக்கு வரம்பற்ற முறையில் வரி விதிக்கும் அதிகாரத்தை வழங்குவது, அமெரிக்காவிலேயே பொருட்களின் விலையை உயர்த்தும் எனக் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இச்சட்டத்திற்கான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இதில் நிறைவேற்றப்பட்ட பிறகே அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

ADVERTISEMENT