டொனால்ட் டிரம்பின் DOGE முயற்சிகள் வீண்? அமெரிக்க கடன் $36 டிரில்லியனைத் தாண்டியது
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்கத் திறன் துறை (DOGE) கூட்டாட்சி செலவினங்களைக் கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், அமெரிக்காவின் தேசியக் கடன் $36 டிரில்லியனைத் தாண்டியுள்ளது.
இந்த அறிக்கையை எழுதும் சமயத்தில் அமெரிக்காவின் லைவ் கடன் கடிகாரம் $36.5 டிரில்லியனைத் தாண்டிய எண்ணிக்கையைக் காட்டியது.
இதற்கிடையே, சமீபத்திய அப்டேட்டில், லைவ் கடன் கடிகார தளம் DOGE சேமிப்புக்கான ஒரு பகுதியை புதிதாக அறிமுகப்படுத்தியது.
இது தற்போது தோராயமாக $114 பில்லியனாக உள்ளது. இருப்பினும், வெள்ளை மாளிகை இன்னும் இந்த தகவல்களை சரிபார்த்து உறுதிப்படுத்தவில்லை.
2024 நிதியாண்டின் நிலவரப்படி, அமெரிக்கக் கடன் $34 டிரில்லியனாக அறிவிக்கப்பட்டது.
இது நாட்டின் பொருளாதாரத்திற்கு கிட்டத்தட்ட சமம் என்று அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது.
பட்ஜெட்
சமநிலையான பட்ஜெட் குறித்து டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை
ஜனாதிபதி டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சமநிலையான பட்ஜெட்டை அடைவதில் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
டிரம்ப் சமீபத்தில் தனது சொந்த சமூக ஊடகமான ட்ரூத் சோஷியலில், "சமநிலையான பட்ஜெட்!!!" எனக் குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் இதே கருத்தை எதிரொலிக்கும் பதிவை வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், நிதி வல்லுநர்கள் இந்த நடவடிக்கைகளின் சாத்தியம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர்.
பொறுப்புள்ள கூட்டாட்சி பட்ஜெட்டுக்கான குழுவின் (CRFB) மூத்த கொள்கை இயக்குனர் மார்க் கோல்ட்வீன், டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையை விமர்சித்தார்.
பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவது ஒரு பொதுவான அரசியல் வாக்குறுதியாக இருந்தாலும், உண்மையான கொள்கைகள் பற்றாக்குறையை 25% முதல் 50% வரை மோசமாக்கக்கூடும் என்று கூறினார்.