இந்தியாவுக்கான $52.8 மில்லியன் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கருவி விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
அமெரிக்கா, இந்தியாவுக்கான $52.8 மில்லியன் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கருவிகளின் விற்பனையை அங்கீகரித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேம்படுத்துவதையும், இரு நாடுகளுக்கிடையேயான மூலோபாய ராணுவ உறவை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க பயணத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் AN/SSQ-53G, AN/SSQ-62F மற்றும் AN/SSQ-36 என்ற வகை சோனோபாய் கருவிகள் உள்ளிட்டவையும், இது தொடர்பான தொழில்நுட்பக் கட்டுரைகள், பொறியியல் ஆதரவு, மற்றும் அமெரிக்க அரசு மற்றும் ஒப்பந்ததாரர்கள் வழங்கும் பிற ஆதரவுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க ராணுவ உறவை மேம்படுத்தும் ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்திற்கு மத்தியில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் பேணுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை இந்த ஒப்பந்தம் பெரிதும் மேம்படுத்தும். குறிப்பாக, MH-60R ஹெலிகாப்டர்களில் இருந்து சோனோபாய் கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த முறையில், இந்தியா தனது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் செயல்பாடுகளை மேம்படுத்தி, பாதுகாப்பு சக்தியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க பயணத்தில் பங்களாதேஷ் விவகாரம், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசப்படும் எனக் கூறப்படுகிறது.