அமெரிக்காவில் 'பிறப்பு சுற்றுலா' வலையமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி: புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்தார் மார்கோ ரூபியோ
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை கிடைக்கும் சட்டத்தை பயன்படுத்தி, வணிக நோக்கில் நடத்தப்படும் 'பிறப்பு சுற்றுலா' வலையமைப்புகளுக்கு கடிவாளம் போடும் வகையில் புதிய விசா கட்டுப்பாட்டு கொள்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் தேசிய சட்டத்தின் பிரிவு 212(a)(3)(C)-ன் கீழ் இந்த புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறும் நோக்கத்திற்காக மட்டுமே பெண்களை அமெரிக்காவிற்கு அழைத்து வரும் வணிக வலையமைப்புகள் மற்றும் அதற்குத் துணையாகச் செயல்படும் நபர்களை இலக்காகக் கொண்டு விசாக்கள் மறுக்கப்படும்.
ஏஜென்ட்
குறி வைக்கப்பட்ட ஏஜெண்டுகள்
வணிக உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள்: பிறப்பு சுற்றுலா ஏஜென்சிகள், பிரசவத்திற்க்கான தங்கும் விடுதிகளை நடத்தும் உரிமையாளர்கள்.
விசா 'பிக்சர்கள்': போலி ஆவணங்களைத் தயாரிக்கவும், விசா நேர்காணலில் பொய் சொல்லவும் தூண்டும் இடைத்தரகர்கள்.
வெளிநாட்டு மருத்துவ சேவை வழங்குநர்கள்: அறிந்து கொண்டே இத்தகைய பயணங்களுக்குத் துணை நிற்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள்.
மெடிகேட் முறைகேடு செய்பவர்கள்: அமெரிக்க அரசின் மெடிக் எயிட் நிதி உதவியை தவறாக பயன்படுத்தத் தூண்டுபவர்கள்.
பிறப்பு சுற்றுலா
'பிறப்பு சுற்றுலா' என்றால் என்ன?
குழந்தைக்கு குடியுரிமை பெறுவதற்காக மட்டுமே முதன்மை நோக்கமாக கொண்டு சுற்றுலா விசா (B-1/B-2) மூலம் அமெரிக்காவிற்கு பயணம் செய்வது 'பிறப்பு சுற்றுலா' எனப்படுகிறது.
இது சட்டப்பூர்வமான பயணம் அல்ல என்றும், இத்தகைய நோக்கத்துடன் வரும் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும் என்றும் தூதரகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
அதேவேளையில், கர்ப்பிணி பெண்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு பொதுவான தடை எதுவுமில்லை என்றும், வணிக ரீதியாக ஏமாற்றி அழைத்து வரும் ஏஜென்ட்கள் மீது மட்டுமே இந்த நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
அமெரிக்க அரசின் கடும் எச்சரிக்கை
"அமெரிக்கக் குடியுரிமை விற்பனைக்கு உரியது அல்ல" என்று குறிப்பிட்ட மார்கோ ரூபியோ, நாட்டின் வரிப்பணம் மற்றும் குடிவரவு அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் விசா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.