உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு
நேற்று(ஜூன் 6) தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பெரிய அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், 24 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின, 17,000 மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நோவா ககோவ்கா அணை இடிந்து விழுந்ததையடுத்து, டினிப்ரோ ஆற்றின் அருகே உள்ள ரஷ்ய மற்றும் உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் சுமார் 42,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரிய அணை இடிந்து விழுந்ததற்கு உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்திற்கு ககோவ்கா அணையில் இருந்து தான் குளிரூட்டும் நீர் வழங்கப்பட்டு வந்ததது. மேலும், இந்த அணையில் தாக்குதல் நடப்பட்டிருப்பதால் "பல இறப்புகள்" ஏற்படக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்ததுள்ளது.
உயிரியல் பூங்காவில் இருந்த 300 விலங்குகள் உயிரிழந்தன
17,000 பேர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்றும் மொத்தம் 24 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 42,000 பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இன்று இந்த எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்துகள், ரயில்கள் மற்றும் தனியார் வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரையில் இருக்கும் கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அந்த உயிரியல் பூங்காவில் இருந்த 300 விலங்குகளும் உயிரிழந்தன. இதற்கிடையில், உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவை குறிவைத்து குற்றம்சாட்டி வருகின்றன.