இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம்
உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்,வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2010 முதல் 2016 வரை பிரிட்டனின் பிரதமராக இருந்த கேமரூன், பிரெக்சிட் வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக டேவிட் கேமரூனை, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் வெளியுறவு செயலாளராக நியமித்ததை அடுத்து, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன்று மீண்டும் முன்னணி அரசியலுக்கு திரும்பினார். ஏற்கனவே 2022 முதல் பணியாற்றி வந்த ஜேம்ஸ் க்ளெவர்லிக்கு பதிலாக கேமரூன் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவி நீக்கம் செய்யபட்ட சுயெல்லா பிரேவர்மேனுக்கு பதிலாக ஜேம்ஸ் க்ளெவர்லி உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் ஆனார் ஜேம்ஸ் க்ளெவர்லி
உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து அமைச்சரவையில் இந்த பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாலஸ்தீன ஆதரவு ஊர்வலத்தை காவல்துறையினர் கையாண்டது குறித்து பிரேவர்மேன் கடந்த வாரம் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து அவர் இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த வாரம், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் அனுமதி இல்லாமல், பாலஸ்தீன ஆதரவு ஊர்வலத்தை காவல்துறையினர் கையாண்டது குறித்து பிரேவர்மேன் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.காசாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் போராட்டக்காரர்கள் வெறுப்பு எண்ணங்களை கொண்டவர்கள் என்றும், அப்படிப்பட்ட போராட்டக்காரர்களான "பாலஸ்தீனிய சார்பு கும்பல்கள்" சட்டத்தை மீறுவதை லண்டன் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் சுயெல்லா பிரேவர்மேன் அந்த கட்டுரையில் கூறி இருந்தார்.