Loading...
ஷார்ஜாவில் கர்நாடக நபர் கொடூரக் கொலை: 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் கண்டெடுப்பு, மனைவி மற்றும் மகன் மாயம்
ஷார்ஜாவில் கர்நாடக நபர் கொடூரக் கொலை

ஷார்ஜாவில் கர்நாடக நபர் கொடூரக் கொலை: 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் கண்டெடுப்பு, மனைவி மற்றும் மகன் மாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2026
12:07 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குண்டர் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஷார்ஜா நகரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டு காருக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஷார்ஜா விமான நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பிரகாஷ், தனது மனைவி டினா மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன் அங்கேயே வசித்து வந்தார். ஷார்ஜா காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளுக்காக காத்திருக்கும் பிரகாஷின் குடும்பத்தினர், உடலை இந்தியா கொண்டுவரவும் மாயமான மனைவி மற்றும் மகனை கண்டுபிடிக்க உதவக்கோரியும் உடுப்பி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

சந்தேகம்

சந்தேகத்தை ஏற்படுத்திய வாட்ஸ்அப் மெசேஜ்

கடந்த ஜூலை 20-ஆம் தேதிக்கு பிறகு பிரகாஷை தொடர்பு கொள்ள முடியாததால், அவரது சகோதரர் அனில் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

அழைப்பை ஏற்காத பிரகாஷின் எண்ணிலிருந்து, "நான் நலமாக இருக்கிறேன்" என்ற குறுஞ்செய்தி மட்டும் வந்துள்ளது.

வழக்கமாக குரல் பதிவு மட்டுமே அனுப்பும் பிரகாஷிடம் இருந்து SMS வந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், ஷார்ஜாவிலுள்ள அவரது நண்பர் மூலமாக விசாரித்தபோது, அவர் இந்தியா சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால், அவர் இந்தியா வரவில்லை என்பதை பாஸ்போர்ட் சோதனைகள் உறுதி செய்ததை அடுத்து, ஷார்ஜா காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

சடலம்

காருக்குள் 2 பைகளில் சடலம்

போலீசார் நடத்திய தீவிர தேடுதலில், ஓமன் செல்லும் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் பிரகாஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது சடலம் 9 துண்டுகளாக வெட்டப்பட்டு 2 பைகளில் அடைக்கப்பட்டிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இக்கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து பிரகாஷின் மனைவி டினா மற்றும் அவரது மகன் ஆகியோர் மர்மமான முறையில் மாயமாகியுள்ளனர்.

அவர்கள் இந்தியா திரும்பியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டாலும், இதுவரை அவர்களை பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இக்கொலையில் மனைவியின் பங்கு உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT