7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. அந்த நிலநடுக்கம் 63 கிமீ(39 மைல்) ஆழத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் EMSC கூறியுள்ளது, இதனையடுத்து, பிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு. மேலும், தெற்கு பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பலாவ் மற்றும் மலேசியாவின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. விரைவில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை 3 அடி உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பு
உள்ளூர் நேரப்படி(1600 GMT) நள்ளிரவில் சுனாமி அலைகள் பிலிப்பைன்ஸைத் தாக்கக்கூடும் என்றும் மணிக்கணக்கில் இது தொடரலாம் என்றும் பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஏஜென்சி PHIVOLCS தெரிவித்துள்ளது. ஜப்பான் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு(1630 GMT) ஒரு மீட்டர்(3 அடி) உயரமுள்ள சுனாமி அலைகள் ஜப்பானின் மேற்கு கடற்கரையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானின் NHK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவு செய்யப்ட்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில், தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.