வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி
அமெரிக்கக் கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தானியங்கி கிரீன் கார்டு வழங்கப்படும் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். ஒரு போட்காஸ்டில்,"பிரகாசமான மாணவர்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதைத் தடுக்க இந்த நடவடிக்கை தேவை. அங்கு அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள்" என்று டிரம்ப் கூறினார். முன்னதாக, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த ட்ரம்ப், நவம்பர் தேர்தலுக்கு முன்னர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார் என்பதை இது காட்டுகிறது. குடியுரிமை என்பது அமெரிக்காவின் முக்கிய தேர்தல் பிரச்சினைகளில் ஒன்றாகும். பியூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய கருத்துக் கணிப்பில், பதிவு செய்யப்பட்ட அமெரிக்க வாக்காளர்களில் 59% பேர் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க விரும்புவதாகக் காட்டியது.
அமெரிக்கா குடியுரிமை பற்றி ட்ரம்பின் நிலைப்பாடு
"நீங்கள் கல்லூரியில் பட்டம் பெற்றீர்கள், உங்கள் டிப்ளோமாவின் ஒரு பகுதியாக நீங்கள் தானாகவே கிரீன் கார்டைப் பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த நாட்டில் தங்குவதற்கு ஒரு கிரீன் கார்டு. அதில் ஜூனியர் கல்லூரிகளும் அடங்கும்," என்று டிரம்ப் 'ஆல்-இன்' போட்காஸ்டில் கூறினார். "கல்லூரியில் பட்டம் பெற்று அவர்கள் இங்கு தங்க விரும்பினர். அவர்களிடம் ஒரு நிறுவனத்திற்கான திட்டம், ஒரு கருத்து இருப்பினும் அவர்களால் தங்க முடியாததால், அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்கிறார்கள். மீண்டும் இந்தியாவுக்கு, அவர்கள் சீனாவுக்குத் திரும்பிச் செல்கிறார்கள். அந்த இடங்களில் அதே அடிப்படை நிறுவனத்தை தொடங்குகிறார்கள்....மேலும் அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை வேலைக்கு அமர்த்தும் பல பில்லியனர்களாக மாறுகிறார்கள், அதை இங்கே செய்திருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவை நோக்கி படையெடுக்கும் இந்திய மாணவர்கள்
2023ஆம் ஆண்டில், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா 1,40,000 விசாக்களை வழங்கியது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது என எதிர்பார்க்கப்படுவதால், மாணவர் விசா விண்ணப்பங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கையாள, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தயாராகி வருகிறது. இந்தியாவில் இருந்து மாணவர் விண்ணப்பங்களின் அதிகரிப்புக்கு இடமளிக்கும் வகையில், தூதரகம் வழக்கத்தை விட முன்னதாக நேர்காணல்களைத் தொடங்கியுள்ளது. நிரந்தரக் குடியுரிமை அட்டை என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் க்ரீன் கார்டு என்பது அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணமாகும். இது வைத்திருப்பவருக்கு நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்தை வழங்குகிறது. போட்காஸ்டில், உயர் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற பிறகு, வெளிநாட்டு மாணவர்கள் கிரீன் கார்டு பெறுவது குறித்த தனது முதல் காலக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார் டிரம்ப்.