லிமோசைனை ஒட்டிய ரஷ்யா அதிபர் புடினும், வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உம்; வைரலாகும் காணொளி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னும், ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட ஆரஸ் லிமோசைனை மாறிமாறி ஓட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இறுக்கமான பாதுகாப்பிற்கு மத்தியில், இரு தலைவர்களும், தங்கள் பணி உறவு எவ்வளவு நெருக்கமாக மாறியது என்பதைக் காட்ட இந்த தருணத்தைப் பயன்படுத்தினர். புடினின் வடகொரியா வருகையின் போது, இரு தலைவர்களும் ஒரு பரஸ்பர பாதுகாப்பு உறுதிமொழியை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இந்த ஜாலி ரைட் சென்றதாக கூறப்படுகிறது. ரஷ்ய அரசு தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில், புடின் கறுப்பு கவசம் அணிந்த ஆரஸின் காரை ஓட்டுவதுபோல காட்டப்பட்டது. இது வடகொரியாவிற்கு புடின் பயணத்திற்காக ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ ஜனாதிபதி காராகும்.
கார் ஓட்டிய விளாடிமிர் புடின், கிம் ஜாங் உன்
வட கொரியா அதிபருக்கு ரஷ்யாவின் பரிசு அந்த லிமோசைன் கார்
தீவிர ஆட்டோமொபைல் ஆர்வலர் என்று நம்பப்படும் அதிபர் கிம், அதே வீடியோவில் புடினை ஓட்டிச் செல்வது போல காட்டப்படுகிறது. புடினின் உதவியாளர் ஒருவர், கிம்முக்கு ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட ஆரஸ் லிமோசைனை அதிபர் புடின் பரிசாக வழங்கினார் என்று கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. புடின் இந்த ஆண்டு பிப்ரவரியில் கிம்முக்கு ஆரஸ் லிமோசைனை பரிசாக கொடுத்தார். சோவியத் காலத்தின் ZIL லிமோசினுக்குப் பிறகு ரெட்ரோ பாணியில் உருவாக்கப்பட்ட ஆரஸ் செனட், ரஷ்ய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ காராகும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் வட கொரியாவிற்கு ஆடம்பர பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்திருந்தாலும், கிம்மிடம் ஏராளமான சொகுசு வெளிநாட்டு வாகனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவை கடத்தப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.