LOADING...
இந்தியாவில் 2030-க்குள் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு பல மடங்கு உயரும் அபாயம்
இந்த ஆய்வு முடிவுகள், நாட்டின் சுகாதார நிலவரம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளன

இந்தியாவில் 2030-க்குள் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு பல மடங்கு உயரும் அபாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2026
09:09 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் மிக தீவிரமாக அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் NCDIR நடத்திய ஆய்வு எச்சரித்துள்ளது. IJMR இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகள், நாட்டின் சுகாதார நிலவரம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆய்வின்படி, வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மிசோரம் மாநிலத்தின் ஆய்ஸ்வால் பகுதி அதிக பாதிப்புகளைக் கொண்டுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத பெண்கள் மற்றும் இளைஞர்களிடமும் இப்பாதிப்பு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காற்று மாசுபாடு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் விறகு அடுப்புப் புகை, மற்றும் மறைமுகப் புகை (Second-hand smoke) ஆகியவை முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

தமிழகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகள்

தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் முறையே ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஆண்டுதோறும் இந்தப் பாதிப்பு அதிக சதவீதத்தில் உயர்ந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 'அடினோகார்சினோமா' (Adenocarcinoma) வகை புற்றுநோய் தற்போது பெண்களிடையே அதிகம் பரவி வருகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் சிகிச்சைக்கான தேவை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரும் என்பதால், முன்கூட்டியே நோயைக் கண்டறிதல் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். 2030 ஆம் ஆண்டுக்குள், கேரளாவின் சில பகுதிகளில் ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 33 சதவீதத்தை தாண்டும் என்றும், பெங்களூரு போன்ற நகரங்களில் பெண்களிடையே இது ஒரு லட்சத்திற்கு 8 சதவீதமாக உயரும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Advertisement