பவர் ரேஞ்சர்ஸ் வில்லனாகும் பிரியங்கா சோப்ரா? டிஸ்னி பிளஸின் அதிரடி திட்டம்!
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய நட்சத்திரமாக திகழும் பிரியங்கா சோப்ரா, மீண்டும் ஒரு பிரம்மாண்ட ஹாலிவுட் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Disney+ நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் 'பவர் ரேஞ்சர்ஸ்' (Power Rangers) தொடரில், மிகவும் பிரபலமான 'Rita Repulsa' எனும் வில்லி கதாபாத்திரத்திற்கு பிரியங்கா சோப்ராவை தேர்வு செய்ய படக்குழுவினர் ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், The DisInsider வெளியிட்ட தகவலின்படி, டிஸ்னி ஸ்டுடியோவின் விருப்பப் பட்டியலில் பிரியங்காவின் பெயர் முன்னணியில் உள்ளது. ஏற்கனவே 2017-ல் வெளியான 'பேவாட்ச்' (Baywatch) திரைப்படத்தில் விக்டோரியா லீட்ஸ் என்ற வில்லி கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை பிரியங்கா வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விவரங்கள்
தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் கலக்கிவரும் பிரியங்கா சோப்ரா
இந்த புதிய தொடரை 'பெர்சி ஜாக்சன் அண்ட் தி ஒலிம்பியன்ஸ்' புகழ்பெற்ற ஜொனாதன் இ. ஸ்டெய்ன்பெர்க் மற்றும் டான் ஷாட்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்குகின்றனர். எனவே, இந்தத் தொடர் முந்தைய பதிப்புகளை விடவும் மிகவும் ஆழமான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரியங்கா சோப்ரா, பிராங்க் ஈவன் பிளவர்ஸ் ஜூனியர் இயக்கத்தில் 'தி பிளஃப்' (The Bluff) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 1800-களின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் அவர் கடற்கொள்ளையராக நடித்துள்ளார். இத்திரைப்படம் பிப்ரவரி 25 முதல் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. எஸ்.எஸ். ராஜமௌலியின் 'வாரணாசி' படத்தைத் தொடர்ந்து, 'பவர் ரேஞ்சர்ஸ்' வாய்ப்பு உறுதியானால், அது ஹாலிவுட்டில் பிரியங்காவின் நிலையை மேலும் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.