LOADING...
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்' பிரகடனம்: ஆபரேஷன் கசாப் லில்-ஹக் குறித்த முழு விவரம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் இந்த அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்' பிரகடனம்: ஆபரேஷன் கசாப் லில்-ஹக் குறித்த முழு விவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 27, 2026
10:17 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடனான உறவு இனி "நேரடிப் போர்" நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளார். வியாழக்கிழமை மாலை கைபர் பக்துன்க்வா எல்லையில் தாலிபான் படைகள் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, பாகிஸ்தான் இந்த அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலில் இரு பக்கமும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாலிபான் படையினர், பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறினர்.

கசாப் லில்-ஹக்

ஆபரேஷன் கசாப் லில்-ஹக் பற்றி:

பாகிஸ்தான் தகவல் அமைச்சகத்தின் தகவல்படி, இந்த ராணுவ நடவடிக்கையின் கீழ் காபூல், காந்தகார் மற்றும் பக்தியா ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள தலிபான் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் விமானப்படை குண்டுமழை பொழிந்துள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை 133 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகமான 'தி டான்' செய்தி வெளியிட்டுள்ளது. நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள தலிபான்களின் ஆயுதக் கிடங்கு மற்றும் முக்கிய ராணுவ கட்டமைப்புகள் பாகிஸ்தான் விமானப்படையால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

காரணம்

ஏன் இந்தப் போர்?

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் 'தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்' (TTP) போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டி வருகிறது. "நாங்கள் பலமுறை அமைதிக்கு முயன்றோம், ஆப்கானிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தோம். ஆனால் எங்களின் பொறுமை இப்போது தீர்ந்துவிட்டது," என்று கவாஜா ஆசிப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மறுபுறம், ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதோடு, பாகிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. எல்லையில் இரு நாடுகளும் கனரக ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளதால், போர் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

Advertisement