தோஷகானா வழக்கில் பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை
தோஷகானா வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பாக்,.நீதிமன்றம். அதோடு 10 ஆண்டுகள் பொது பதவியில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ரூ.787 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக நேற்று, பாகிஸ்தான் நீதிமன்றம் இம்ரான்கான் மற்றும் அமைச்சர் ஷா மெஹ்மூத் ஆகியோர், அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது. பாகிஸ்தான் உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டதற்கு பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி மாவட்ட நீதிமன்றம் விசாரணையைத் தொடர்ந்துள்ளது.
தோஷகானா வழக்கின் பின்கதை என்ன?
இம்ரான்கான், தேர்தல் ஆணையத்திடம், அரசு பரிசுகளை பற்றி போலி விவரங்களை சமர்ப்பித்ததாகக் கூறி, 2022ஆம் ஆண்டில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில்(ECP) தோஷகானா வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இம்ரான் கான் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்த காலத்தில், வெளிநாட்டு அதிகாரிகளிடம் இருந்து அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் வைக்கப்பட்டுள்ள கஜானாவான 'தோஷஸ்கானா'வில் வைத்திருந்த பரிசுப் பொருட்களின் விவரங்களை, இம்ரான்கான் வேண்டுமென்றே மறைத்துவிட்டார் என்றும், அவற்றை விற்றார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ECP முதலில் அவரை தகுதி நீக்கம் செய்தது. பின்னர் ஒரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.