அரசு ரகசியங்களை கசியவிட்டதற்காக இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் செவ்வாய்க்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவருக்கு இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்தலில் போட்டியிடுவதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2022 இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏற்கனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் "அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சருக்கும் 10 ஆண்டுகள் சிறை
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இன்று 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்பின்(பி.டி.ஐ) துணைத் தலைவர் ஆவார். சைஃபர் கேஸ் என்று பரவலாக அறியப்படும் இந்த வழக்கு, ரகசிய அரசு கடிதப் பரிமாற்றங்கள் கசிந்ததாகக் கூறப்படுவதை மையமாகக் கொண்டது. இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரால் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம் கசிந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை இம்ரான் ஒரு அரசியல் கூட்டத்தின் போது பொதுமக்களிடம் கட்டியதாகவும், அதில் இருந்த விவரங்களை வெளிப்படையாக கூறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.