
'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு
செய்தி முன்னோட்டம்
பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸால் இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை இன்று கண்டித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர், அந்த தாக்குதலை 9/11 பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டுள்ளார்.
"நாங்கள் ஏற்கனவே 250 பேரை இழந்துள்ளோம். இது அமெரிக்காவில் 7,500 பேர் உயிரிழப்பதற்கு சமம். ஏற்கனவே 1,500 பேர் காயமடைந்துள்ளனர். இது அமெரிக்காவில் 50,000 பேர் காயமடைவதற்கு சமம்" என்று இஸ்ரேலிய தூதர் கிலாட் எர்டன் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
"இது எங்களது 9/11 தாக்குதல்" என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
9/11 தாக்குதல்கள் என்பது அமெரிக்காவின் வரலாற்றில் நடந்த மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதல்களாகும். அமெரிக்காவில் இந்தத் தாக்குதல்களில் 2,977 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25,000 பேர் காயமடைந்தனர்.
டவ்கஃப்
"முழுப் பொறுப்பையும் ஹமாஸ் ஏற்கும்": இஸ்ரேல்
இஸ்ரேலிய தூதர் கிலாட் எர்டன், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அமெரிக்காவின் கொடிய 9/11 தாக்குதல்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
மேலும், ஹமாஸ் போராளிகளை "விலங்குகள்" என்று அழைத்த எர்டன், பொதுமக்களைக் கொன்றதற்காக அந்த குழுவைக் கடுமையாக கண்டித்தார்.
"குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெரும்பாலானோர் தெருக்களில் படுகொலை செய்யப்பட்டனர். இது போன்ற ஒன்றை நாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம்" என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் "முழுப் பொறுப்பையும் ஹமாஸ் ஏற்கும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிடம் இஸ்ரேல் கூறியுள்ளது.